TN CM Vijay Assembly Full Speech:
தமிழக சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதல்வர் சி. ஜோசப் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் புள்ளிவிவரங்களுடனும் வரலாற்றுத் தரவுகளுடனும் பதிலடி கொடுத்து விரிவான உரையாற்றினார்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, நவீனக் காவல்துறை உருவாக்கம், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, அரசு நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைத்தன்மை, கடந்த கால திமுக ஆட்சியின் நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் ஊழல் ஆவணங்களை வெளிக்கொணர்ந்து அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1. சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி!
ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது வெறும் சாலைகள் அமைப்பதிலோ, புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதிலோ மட்டும் அடங்கிவிடாது என்று தனது உரையைத் தொடங்கிய முதலமைச்சர், “அந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனும் எவ்வளவு பாதுகாப்பாகவும், எவ்வித அச்சமும் பயமும் இன்றியும் வாழ்கிறான் என்பதில்தான் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது” என அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் சூழலில்தான் தொழில் முதலீடுகள் தடையின்றி வரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும்; முக்கியமாகப் பெண்களும் இளைஞர்களும் அச்சமின்றிச் சுதந்திரமாகக் கல்வி பயிலவும், வேலைவாய்ப்புகளில் ஈடுபடவும் முடியும்.
எனவே, காவல்துறை என்பது குற்றவாளிகளைக் கைது செய்யும் அமைப்பாக மட்டும் சுருங்கிவிடாமல், ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி, முதலீட்டுச் சூழல் மற்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய தலையாய அடித்தளமாகச் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.
2. காவல்துறையின் அணுகுமுறை மற்றும் செயல்பாடுகள்!
காவல்துறையின் அடிப்படைத் தத்துவம் குறித்துப் பேசிய முதல்வர், “சட்டத்தை மதித்து நடக்கும் அப்பாவிக் குடிமக்களுக்குக் காவல்துறை உற்ற தோழனாகவும் நண்பனாகவும் இருக்க வேண்டும்; அதேநேரத்தில், சட்டத்தையும் பிற மனிதர்களின் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் கொடியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பரம எதிரியாகக் காவல்துறை திகழ வேண்டும்” என்றார். ஒரு சிறந்த காவலர் இந்த இரு நற்பண்புகளையும் ஒருங்கே கொண்டிருக்க வேண்டும்.
காவல்துறையினர் எவ்வித அரசியல் இடையூறோ அச்சமோ இன்றித் தங்களது சட்டப்பூர்வக் கடமையைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்யக்கூடிய நிர்வாகச் சூழலைத் தனது அரசு உறுதி செய்துள்ளது. முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், பெரும் அதிகாரிகளாக இருந்தாலும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் எவரும் தலையிடக் கூடாது எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவாளி எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அரசின் மாறாத நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்தினார்.

3. குற்றங்களின் சமூகப் பின்னணி!
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த வாதங்களை உள்நோக்கம் கொண்ட விமர்சனமாக இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த அக்கறையாகவே அரசு அணுகுகிறது எனக் குறிப்பிட்ட முதல்வர், திருவள்ளுவர் உரைத்த நடுநிலைமை நயப்பிற்கு எடுத்துக்காட்டாக ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார்.
தந்தை பெரியாரின் சமூக நீதி, பெருந்தலைவர் காமராஜரின் நேர்மையான நிர்வாகம், பேரறிஞர் அண்ணாவின் மக்கள் நல அரசு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஏழை எளிய மக்களுக்கான தொண்டு ஆகிய பெருநெறிகளை ஒருங்கிணைத்து, காவல்துறை அதிகாரத்தின் அடையாளமாக மாறாமல் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ வேண்டும் என்றார்.
குற்றங்களைத் தனிமைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற பார்வையை முன்வைத்த முதல்வர், “ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டது என்பதற்காகவே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துவிட்டது என்று முடிவுகட்டிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவங்களுக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு” என விளக்கினார்.
குற்றங்கள் கடந்த 100 நாட்களில் திடீரென முளைத்துவிடவில்லை; குடும்பத் தகராறுகள், சொத்துப் பிரச்சனை, முன்விரோதம், பழிவாங்கும் மனோபாவம், சாதிய மோதல்கள், போதைப் பழக்கம், நிலம் மற்றும் அதிகாரப் போட்டி, கலப்புத் திருமண எதிர்ப்பு, சமூக வலைதளங்களின் எதிர்மறைத் தாக்கம் போன்ற பல்வேறு ஆழமான சமூகக் காரணிகள் குற்றங்களுக்குப் பின்னால் உள்ளன.

கடந்த 30.07.2026 அன்று நடைபெற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில், குற்றம் நடந்த பிறகு கைது செய்வதோடு காவல்துறையின் பணி முடிந்துவிடக் கூடாது; குற்றம் உருவாவதற்கான சூழலைக் கண்டறிந்து அதை முன்கூட்டியே தடுக்கும் ‘தடுப்புக் காவல் முறை’ (Preventive Policing) மற்றும் ‘குற்ற வரைபட உத்தி’ (Crime Mapping) கொண்டு செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.
4. டிஜிட்டல் குற்றங்கள்: சைபர் பாதுகாப்பு!
21-ஆம் நூற்றாண்டில் குற்றங்கள் வீதிகளோடு நின்றுவிடாமல் இணையவெளியிலும் பெருகிவிட்டதை முதல்வர் சுட்டிக்காட்டினார். இணையதள நிதி மோசடிகள், போலி முதலீட்டுத் திட்டங்கள், ஓடிபி மற்றும் வங்கி மோசடிகள், வேலைவாய்ப்பு மோசடிகள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
இதற்குத் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டுமே காரணமல்ல; மக்களிடையே போதிய டிஜிட்டல் விழிப்புணர்வு இல்லாமை, குறுக்குவழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கும் ஆசை, முதியவர்களுக்கு நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகமின்மை ஆகியவையும் காரணங்களாகும்.
சைபர் குற்றங்களைத் தடுப்பதற்குக் காவல்துறையின் தொழில்நுட்பத் திறனை உயர்த்துவதோடு நின்றுவிடாமல், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்த சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
“ஒரு குற்றவாளியைக் கைது செய்வது காவல்துறையின் வெற்றி என்றால், ஆயிரம் பேர் அக்குற்றத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பது அதைவிடப் பெரிய வெற்றி” என்று முதல்வர் குறிப்பிட்டார்.
5. மாணவர்கள் மற்றும் இளைஞர் வன்முறை குறித்த பேச்சு!
சமீபத்தில் கோவையில் மாணவர் அமுதன், சென்னை திருவொற்றியூரில் தனுஷ்குமார் ஆகியோர் கொல்லப்பட்ட துயரச் சம்பவங்களை வேதனையுடன் நினைவுகூர்ந்த முதல்வர், இச்சம்பவங்களில் தொடர்புடைய 36 நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.
அதேவேளையில், இளைஞர்கள் வன்முறையில் சிக்குவதை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது என்றார். “2021 முதல் 2025 வரை முந்தைய ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை புள்ளிவிவரங்களை அடுக்குவதற்கு என்னாலும் முடியும்; ஆனால் அத்தகைய தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய என் மனம் இடம்தரவில்லை. ஒரு மாணவன் சக மாணவனைத் தாக்கும்போது எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கும் மனநிலையை உளவியல் ரீதியாக ஆராய வேண்டும்.
‘போதை கலாச்சாரம்’ என்ற ஒற்றை வார்த்தையில் பழியைப் போட்டுவிட்டு ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் குறை கூறி ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தவறிழைத்த மாணவர்களுக்கும் ஒரு மூத்த அண்ணனாக, குடும்பத்தில் ஒருவனாக நின்று அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என்று உருக்கமாகப் பேசினார்.
6. ஊழலுக்கு எதிரான ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கை!
அரசு நிர்வாகத்தில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் அடிப்படை கடமை எனக் குறிப்பிட்ட முதல்வர், “லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்த அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது (Zero Tolerance Towards Corruption)” என முழங்கினார். லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் குடும்ப சுகங்களை மறந்து அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றனர்; அவர்களது சேவையை அரசு தலைவணங்கிப் போற்றுகிறது. ஆனால், ஒரு சிலர் சுயலாபத்திற்காக லஞ்சத்தில் ஈடுபடுவது ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் அவப்பெயரை உண்டாக்குகிறது. அரசு ஊழியர் ஒருவர் லஞ்ச வழக்கில் சிக்கும்போது, அவரது பெயர் ஊடகங்களில் வெளியாகி அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தீராத தலைகுனிவை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும் என எச்சரித்தார்.
7. போதைப்பொருள் ஒழிப்பு: புள்ளிவிவரங்கள்!
கடந்த ஆட்சியாளர்களால் முறையாகக் கவனிக்கப்படாமல் விடப்பட்ட போதைப்பொருள் கலாச்சாரம் இன்று ஆலமரமாக வேரூன்றி நிற்கிறது என்று சாடிய முதல்வர், அந்த மரத்தின் கிளைகளை வெட்டுவதோடு நிற்காமல், வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவதே தனது அரசின் இலக்கு என்றார்.
இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் 65 போதைப்பொருள் தடுப்புப் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

- என்.டி.பி.எஸ் (NDPS) சட்டத்தின்கீழ் 3,263 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,350 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,846 கிலோ கஞ்சா மற்றும் 1,16,159 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- 330 வழக்குகள் பதியப்பட்டு, 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 600 கிலோ கஞ்சா மற்றும் 65,748 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சங்கிலியை அடியோடு தகர்ப்பதே அரசின் நோக்கம் என விளக்கமளித்தார்.
8. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு: ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை!
இரு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட தமிழக வெற்றிக் கழக அரசு, பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும், தோழியாகவும் பாதுகாக்கும் அரசாகச் செயல்படுகிறது என்றார். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்பட்டுள்ளது.
- பெண்களின் பாதுகாப்பிற்காக 2,546 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
- ரூ.357 கோடி மதிப்பீட்டில் 327 நான்கு சக்கர வாகனங்கள், 109 இரு சக்கர வாகனங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம் இதுவரை 268 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, காணாமல்போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- மேலும், 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 21 குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
9. காவல் மரணங்கள் தவிர்ப்பு!
காவல் நிலையத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை பொதுமக்கள் காவல்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையே சிதைத்துவிடும் என்றார். காவல் மரணங்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாஜிஸ்திரேட் விசாரணை, உரிய மருத்துவப் பிரேதப் பரிசோதனை ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படுகின்றன. தவறிழைக்கும் காவலர் எவராக இருந்தாலும் அரசு பாதுகாக்காது. காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில், விபத்து, கலவரம், தீ விபத்து, பேரிடர் போன்ற ஆபத்துகளில் தன்னுயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமை, மன அழுத்தம், நீண்ட நேரப் பணி ஆகியவற்றைக் களைய மனநல ஆலோசனைகள், மருத்துவப் பரிசோதனைகள், வார விடுமுறை ஆகியவை உறுதி செய்யப்படும்.
காவல்துறையில் நீண்டகாலமாகக் காலியாக உள்ள பணியிடங்கள் துறைவாரியாகவும், மாவட்டவாரியாகவும் கணக்கெடுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நிரப்பப்படும் என அறிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையையும் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்த அரசு உறுதியளித்துள்ளது.
10. வன்மப் பேச்சுக்குக் கண்டனம்!
உரையின் இறுதிக் கட்டத்தில் அரசியல் நாகரிகம் குறித்துப் பேசிய முதல்வர், “கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி இரட்டை அர்த்தத்திலும், முகம் சுளிக்கும் வகையிலும் பேசுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக ஓடும் ஆபாச நதியையும் வன்ம நதியையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதே சட்டப்பேரவையில் எதிர்கொண்ட அவமானங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இனி எந்தப் பெண்ணுக்கும் அத்தகைய அநீதி நிகழக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகக் கூறினார். மாற்றுக் கட்சியினரை எலும்பு முறிப்பேன் என்று மிரட்டுவதும், மக்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் நல்ல சாவு வராது எனப் பேசுவதும் என்ன வகையான அரசியல் என வினவினார்.
கவிஞர் கண்ணதாசன் திமுக குறித்து எழுதிய வரிகளை மேற்கோள் காட்டிய முதல்வர்:
“பேசிப் பழகிய வாய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை — இதுதான் திமுக!”

“மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம், தமிழக மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வோம்” என்று எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி, “மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட நாம் தொட மாட்டோம்; தொட்ட எவரையும் விடவும் மாட்டோம்” என கர்ஜித்தார்.
11. சர்க்காரியா கமிஷன் முதல் அமலாக்கத்துறை ஆவணங்கள் வரை: ஊழல் பட்டியல் அம்பலம்!
திமுகவினர் தங்களது ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டதை அடுத்து, முதலமைச்சர் வரலாற்று ஆவணங்களைச் சட்டப்பேரவையில் வாசித்துக் காட்டினார்:
வீராணம் ஊழல் & சர்க்காரியா கமிஷன்: 1970-களில் வீராணம் திட்டக் குழாய் தயாரிப்பு ஒப்பந்தத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்திடம் 2.5% கமிஷன் (ரூ.40 லட்சம்) கேட்கப்பட்ட விவகாரம் சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் முதல் தொகுதியில் 71 முதல் 150 பக்கங்கள் வரை விரிவாக இடம்பெற்றுள்ளது. அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தலைமைப் பொறியாளரைக் கட்டாயப்படுத்தினார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் 1970 முதல் 1974 வரை முரசொலி கட்டடத்திற்காக ரூ.29 லட்சம் கையூட்டு தவணை முறையில் வாங்கப்பட்டதை ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அமலாக்கத்துறை (ED) அறிக்கை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் (MAWS) ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அனுப்பிய 100 பக்க ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிதியின் நேரடிப் பலனாளிகளாக அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழல் & ‘கரூர் கேங்’: முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்கள் மற்றும் பார் உரிமையாளர்களிடம் முறைகேடாகப் பணம் பறித்ததை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கோவை, கரூர் பகுதிகளில் பார் உரிமையாளர்களிடம் கட்டப்பஞ்சாயத்து முறையில் கட்சி நிதி வசூலித்தவர்கள் ‘கரூர் கேங்’ என்று ஆவணங்களில் அழைக்கப்பட்டுள்ளனர். பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதல் கட்டணம் வசூலித்து மாபெரும் அறிவியல் பூர்வ ஊழல் அரங்கேற்றப்பட்டது. ரத்தீஷ் என்ற அதிகாரத் தரகர் துபாய்க்குத் தப்பியோடிய விவகாரத்தையும் சுட்டிக்காட்டினார்.
12. கடந்த திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்!
2021-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, முந்தைய அதிமுக அரசால் தொடங்கப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரத்து செய்ததை முதல்வர் பட்டியலிட்டார்.
- தாலிக்குத் தங்கம் திட்டம்
- அம்மா இருசக்கர வாகனத் திட்டம்
- விலையில்லா ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்
- அம்மா மினி கிளினிக் திட்டம்
- ஏழை மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் (நான்கரை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுத் தேர்தல் நேரத்தில் மட்டும் கண்துடைப்பாக வழங்கப்பட்டது)
- விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் ரூ.1,500 கோடியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்
- அழகன்குப்பம் மீன்பிடித் துறைமுகத் திட்டம் (ரூ.235 கோடி)
- செஞ்சியில் தொடங்கப்பட்ட டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடல்
13. திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யத் தாமதித்த அவலங்கள்!
சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசும் திமுகவினர் ஆட்சியில் ஆளுங்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்த சம்பவங்களை முதல்வர் நினைவூட்டினார்:
- கடலூர் எம்பி டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் தாமதமான கைது.
- விருதுநகர் திமுக நிர்வாகியின் மகன் ஹரிஹரன் மற்றும் வார்டு உறுப்பினர் ஜினைத் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் காலதாமத நடவடிக்கை.
- விருகம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் சி.எஸ்.ஆர் மட்டும் போட்டுவிட்டு நீதிமன்றத் தலையீட்டிற்குப் பிறகே கைது செய்தது.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பெண் ஆய்வாளரைத் தாக்கிய திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர். ஸ்ரீதரன் மற்றும் அவரது மனைவி சிவசங்கரிக்கு ஆதரவாகச் செயல்பட்டது.
- பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கில் வீடியோ வெளியான பிறகும் பல நாட்கள் கழித்துக் கைது செய்தது.
- தூத்துக்குடி விளாத்திகுளம் 17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்.ஐ.ஆர் தாமதம்.
- பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள்.
இவற்றுக்கு, தமது தவெக ஆட்சியில் தூத்துக்குடி, மயிலாப்பூர், ஆலந்தூர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் புகார் எழுந்த உடனேயே ஆளுங்கட்சியினர் மீதும் சமரசமின்றி முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு கைது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

காவல்துறை (மானியக் கோரிக்கை எண் 22) மற்றும் தீயணைப்புத் துறை (மானியக் கோரிக்கை எண் 23) மீதான வெற்றுத் தீர்மானங்களை உறுப்பினர்கள் திரும்பப் பெற்றுக்கொண்டு மானியக் கோரிக்கைகளை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அனைத்துக் காவல் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் நன்றி கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
















